Friday, December 31, 2004

நிவாரண நிதி வழங்க மேலும் சில சுட்டிகள்

https://www.aidindia.org/aidadmin/DonateToRRF.jsp

http://www.tsunamivictims.org/

http://us.rediff.com/news/2004/dec/27tsunami8.htm

http://www.worldvisionindia.org/cescripts/homepage.php

http://www.salesforcefoundation.org/aboutus/donate.html

https://secure.groundspring.org/dn/index.php?aid=2798

நீங்கள் அறிந்தவர்களிடமும், இவற்றைத் தெரிவிக்கவும்.

Thursday, December 30, 2004

'சுனாமி' நிவாரணத்தில் கிரிக்கெட் வீரர்களின் பங்கு?

இன்று காலையில் இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு செய்தி படித்தேன். அதாவது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், தாங்கள் பாகிஸ்தானை வென்றதற்குண்டான மொத்த பரிசுப்பணத்தையும் ($13000) சுனாமியால பாதிக்கப்பட்டவரிகளின் நிவாரணத்திற்காக அளித்ததாக. மேலும் தரப்போவதாகவும் கூறியிருக்கின்றனர். தில்லி ரஞ்சி கிரிக்கெட் வீரர்களும் ஒரு தொகையை நிவாரண நிதியாக தந்திருக்கின்றனர். நமது நாட்டிலேயே, CRPF, BSF, Navy மற்றும் தில்லிபோலீஸ் அமைப்புகள் சில கோடிகளை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கின்றன. ICICI, பாரதி போன்ற நிறுவனங்களும் நிவாரண நிதி பற்றி அறிவித்திருக்கின்றன.

இந்நிலையில், BCCI (Baord of control for cricket in India) அமைப்பும், நமது தேசிய அணியில் பங்கு பெறும் கிரிக்கெட் வீரர்களும், வாயை மூடிக்கொண்டு இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் வாழும் பெரும்பாலான (90%) மக்களின் பேராதரவால் தான், BCCI-ஐக்கும் வீரர்களுக்கும் பல ஸ்பான்ஸர்கள் (sponsors) கிடைக்கின்றனர். அவர்களும் பணத்தில் கொழிக்கின்றனர். BCCI-யிடம் இருக்கும் வைப்பு நிதியான சுமார் 200 கோடி ரூபாயிலிருந்து ஒரு 10 கோடியை நிவாரண நிதியாக எடுத்துக் கொடுத்தால், அவர்கள் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை. டால்மியாவும் அவரைச் சுற்றியுள்ள ஜால்ரா கூட்டமும், 5 நட்சித்திர விடுதிகளில், மீட்டிங் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகளுக்கும், விமான போக்குவரத்துக்கும் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் செலவாகிறது என்று படித்திருக்கிறேன்! நமது கிரிக்கெட் வீரர்களுக்கும் கொஞ்சமாவது நன்றி விசுவாசம் வேண்டாமா? அவர்களுக்குள் ஆலோசித்து, ஒரு தொகை வழங்குவதாக, இழப்பு நடந்து ஓரிரு நாட்களில் அறிவித்திருக்க வேண்டும் அல்லவா? கிரிக்கெட்டையும், வீரர்களையும் மிகவும் நேசிக்கும் நம் நாட்டு மக்களுக்கு தாராளமாக உதவுவது கிரிக்கெட் வீரர்களின் தார்மீகக் கடமை என்றே கூறுவேன்!

Monday, December 27, 2004

ஓ! என் அழகு மெரீனா!




நிலநடுக்கத்தைப் பற்றிய ஒரு விளக்கப்படம், கீழுள்ள சுட்டியில்:
http://news.bbc.co.uk/1/hi/world/4126809.stm

பல்லவியும் சரணமும் - பகுதி 13

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் ...
2. ஏதோ சுகம் உள்ளூறுதே, ஏனோ மனம்...
3. கண்ணின் மணி போல மணியின் நிழல் போல கலந்து ...
4. தங்கம் போன்றவை அங்கங்கள், எங்கு வேண்டுமோ தங்குங்கள் ...
5. இரவும் பகலும் இரண்டானால், இன்பம் துன்பம் இரண்டானால் ...
6. சேர்ந்த பல்லின் வரிசை யாவும் முல்லை போன்றது...
7. சொன்ன வார்த்தையும் இரவல் தானடி, அந்த நீலகண்டனின் ...
8. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே, ஒன்று தான் எண்ணம் ...
9. இருந்தால் அவளை தன்னந்தனியே எரியும் நெருப்பில் ...
10. என்னோட மல்லு கட்டி என் மார்பில் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, December 26, 2004

கடல் கொந்தளிப்பால் பாதிப்பு - ஒரு செய்தித் தொகுப்பு

பலியானவர்களின் எண்ணிக்கை 2400-ஐ தாண்டி விட்டது. அதில் சுமார், 1500 பேர் நாகையிலும், 250 கடலூரிலும், 300 பேர் கன்யாகுமரியிலும், 150 பேர் சென்னையிலும், 100 பேர் புதுவையிலும் உயிர் இழந்தனர். சென்னை கடற்கரையில் இத்தனை பேர் இறந்ததற்கும், பலர் காணாமல் போனதற்கும் காரணம், இது ஒரு ஞாயிறு காலையில் ஏற்பட்டதால் தான். பீச்சில் தூங்கி கொண்டிருந்தவர்கள், காலையில் நடை பயின்றவர்கள், விளையாடிய சிறுவர்கள் என்று பலரும் இந்த திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்காமல், அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டார்கள், மூழ்கடிக்கப்பட்டார்கள். ராயபுரம் பகுதியில் உள்ள குப்பங்களிலும் பலர் இறந்து விட்டார்கள். ராயப்பேட்டை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையின் MRTS ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்களில் பலர் (இளைஞர்கள்/மீனவர்கள்) மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது. மத்திய அரசு நெருக்கடி கால நடவடிக்கை குழு ஒன்றை கூட்டி விவாதித்ததன் தொடர்ச்சியாக, பிரதமர், கடற்படையை மீட்பு/நிவாரணப் பணியில் முழு அளவில் ஈடுபட, முடுக்கி விட்டுள்ளார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் (Red Alert) செய்யப்பட்டுள்ளன. மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுப்பட்டிணம் என்ற இடத்தில் ஒரு தேவாலயம் இடிந்து விழுந்து 40 பேர் பலியாயினர். அந்தமான்-நிகோபார் தீவிகளிலும் காலையில் 6 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பெருத்த உயிர்/பொருள் சேதம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று கூறப்படுகிறது. சேலத்திலும், சுற்றுப்பட்ட இடங்களிலும், பூமியில் பெரிய வெடிப்புகள் தோன்றியுள்ளன. தூத்துக்குடி துறைமுகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சுமார் 500 படகுகள் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன என்று கூறப்படுகிறது. சகஜ நிலைக்கு வர சில நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது. ஆந்திராவில், திருப்பதி மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் நிலநடுக்கத்தின் பாதிப்பு இருந்தது. ஆந்திர கடலோரப் பகுதிகளில், கடல் கொந்தளிப்பால், சுமார் 200 பேர் இறந்ததாகத் தெரிகிறது.

சன் டிவி செய்திகளை உடனுக்குடன் வழங்கினாலும், அரசாங்கத்தை குறை சொல்வதே அதன் முக்கிய நோக்கமாகப் பட்டது. நம் நாட்டில், போர்க்கால நடவடிக்கை என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது என்பது தான் உண்மை! ஒரு 'catastrophe'-ஐ எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய அரசு அதிகாரிகள் மிகக்குறைவு. இதற்காக ஒரு பயிற்சியும் அளிக்கப்படுவதும் இல்லை. சிவராஜ் பாட்டீல் நாளை சென்னை வருகிறார். எதற்கு என்று புரியவில்லை? எல்லாம் ஆனபிறகு இந்த அரசியல்வாதிகள் வந்து ஆறுதல் சொல்வதால் என்ன பயன்? அவரவர் இடங்களிலேயே இருந்தபடி, வேலை செய்பவர்களை முடுக்கி விடுவதும், வேண்டிய உதவிகளுக்கு உத்தரவிடுவதும் செய்தாலே போதுமானது!

இன்னொரு நிலநடுக்கத்தை அடுத்த ஓரிரு நாட்களில் எதிர்பார்க்கலாம் என டிவியில் ஒரு நிபுணர் கூறினாலும், நான் பார்த்தவரை, தற்போது, சென்னை மக்களிடையே பீதியும், பதற்றமும் குறைந்துள்ளது. திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் SYMA (Srinivasa Young Men's Association) என்னும் அமைப்பு, பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு ஒரு சத்திரமும், அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்! பல ஆண்டுகளாக, ஆரவாரம் இல்லாமல், SYMA சமூக சேவை செய்து வருகிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்த நிலநடுக்கம்/கடல் கொந்தளிப்புக்கு சென்னையில் நிலத்தடி நீரை ஒட்ட ஒட்ட உறிஞ்சுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது. நிபுணர்கள் தான் விளக்கிச் சொல்ல வேண்டும்.

சென்னையில் நிலநடுக்கமும் கடல் கொந்தளிப்பும்

காலை சுமார் 6-45 மணிக்கு, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வை, சென்னையின் சில பகுதிகளில் மக்கள் உணர்ந்தனர். நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன்! கட்டில் சிறிது கிடுகிடுத்ததாக, என் மனைவி பின்னர் கூறினார். நான் வசிப்பது சென்னை மெரீனா பீச் அருகில். நங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் என் நண்பர், தான் எந்த அதிர்வையும் உணரவில்லை என்று கூறினார். அதனால், எனக்கென்னவோ இந்த நிலநடுக்கத்தின் Epicentre கடலுக்குள் மையம் கொண்டதால் தான், கடலை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே இதன் தாக்கம் அதிகம் இருந்ததாகத் தோன்றுகிறது. இது நடந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது என அறிந்தேன். மாமல்லபுரம் மற்றும் கடலூர் பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து விட்டதாக டிவியில் செய்தி வந்தது. நான் கண்டதை சொல்கிறேன்.

திருவல்லிக்கேணி பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக பீச் நோக்கி சென்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், என்ன தான் நடந்தது என்று அறியும் ஆவலில், இருசக்கர வாகனத்தில், அந்த ஜன சமுத்திரத்தின் ஊடே பயணித்து, மெரீனா பீச்சை அடைந்தேன். கடல் நீர் கடற்கரைச் சாலை வரை வந்த சுவடுகள் தெரிந்தன. நான் பார்த்தபோது, கடல் நீர் ஒரு குட்டை போல, பீச் மணற்பரப்பில் மட்டுமே காணப்பட்டது. சில கார்களும், இருசக்கர வாகனங்களும், பல தள்ளு வண்டிகளும், கட்டுமரங்களும் கடல் நீர் உள்புகுந்து, மீண்டும் திரும்பி சென்றதால் அலைக்கழிக்கப்பட்டு, அங்குமிங்கும் தாறுமாறாக கிடந்தன. இதன் தாக்கம், மெரீனா முதல் லைட் ஹவுஸ் வரை காணப்பட்டது.

தற்போது, நான் பார்த்தவரை, கடல் அமைதியாகவே உள்ளது. பல மீனவர்கள் உஷாராக (மீண்டும் கடல் கொந்தளிப்பு வரலாம் என்ற பயத்தில்) தங்கள் கட்டுமரங்களை பீச் ரோட் அருகே அமைந்த சிலைகள் இருக்கும் இடத்திற்கு இழுத்து வந்து வைத்திருக்கின்றனர். நான் ஒரு ஹெலிகாப்டர் மேலே வட்டமிடுவதையும் கண்டேன். ஞாயிறு காலையில் பீச்சில் கிரிக்கெட் ஆடும் என் நண்பன் கடல் நீர் வேகமாக (6/7 அடி உயரத்தில்) நிலம் நோக்கி வருவதை கண்டு அலறியடித்து ஓடி வந்ததாகவும், ஒரு கார் (உள்ளே ஆட்களுடன்) மூழ்கடிக்கப்பட்டதாகவும் கூறினான். கடல் கொந்தளிப்பைப் பற்றிய டிவி செய்திகள் இப்போது தான் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இதற்கு முன்னர், சிலர் இது குறித்து புரளிகளை பரப்பி பதட்டத்தை உருவாக்கினார்கள். 23 பேர் இறந்து விட்டதாக இப்போது சன் நியூஸ் செய்தியில் பார்த்தேன். இந்த வருத்தத்திற்குரிய சமயத்திலும், ஒரு சிலரின் "இந்த இயற்கை சீற்றத்திற்கு முக்கியக் காரணம் ஜயேந்திரர் கைது செய்யப்பட்டது தான்!!" என்ற கருத்து சிரிப்பை வரவழைத்தது! நம் மக்கள் இருக்கிறார்களே!!!!!!!

Wednesday, December 22, 2004

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் --- பொருளுரை

சில வாரங்களுக்கு முன் எழுதிய "ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்" என்ற கட்டுரையில் குறிப்பிட்ட பாசுரங்களுக்கு, Boston பாலா, மூர்த்தி விளக்கம் கேட்டிருந்தனர். என்னால் ஆன எளிய பொருள் விளக்கத்தை வைகுண்ட ஏகாதசி அன்று தர முயன்றுள்ளேன்.

//திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிற திவ்யப்ரபந்தத்தில் வரும் பல பாடல்களில் காணப்படும் பக்தி ரஸமும் வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பும் பூரண சரணாகதி தத்துவமும் தமிழில் வெறெந்த பக்தி இலக்கியத்திலும் இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும் சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது.//

திருப்பாவை

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்*
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா* உன்தன்னோடு-
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை*
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே*
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்


பதவுரை:
"பசுக்களை மேய்த்தபடி, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்ணும், சொற்ப அறிவு படைத்த நாங்கள், ஆயர்குலத்தினில் பிறந்த உன்னை எங்கள் குலத்தவனாக பெற்றடைய பெரும் புண்ணியத்தை செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத, 'கோவிந்தன்' என்னும் பெயரினைக் கொண்ட கண்ண பெருமானே! உன்னுடன் எங்களுக்கு ஏற்பட்ட உறவை, யாராலும் அழிக்க முடியாது. அற்ப அறிவுடைய சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற) சிறிய பெயர்களினால் ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களைத் தந்து அருள வேண்டுகிறோம்."


சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்


பதவுரை:
"விடியற்காலையில் உன்னை வழிபட்டு, உனது தாமரை மலர் போன்ற மென்மையான திருவடிகளைப் போற்றும் காரணத்தை உன்னிடம் சொல்ல விழைகிறோம். பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் எங்களைப் போன்றே அவதரித்த நீ, எங்களிடமிருந்து சிறு சேவையாவது பெற்றுக் கொள்ளாமல் செல்லுதல் கூடாது. உன்னிடமிருந்து, பறை வாத்தியம் போன்ற பொருள்களைப் பெற்றுக் கொண்டவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை. காலம் உள்ளவரை, மீண்டும் மீண்டும் பிறவியெடுப்பினும், உன்னுடைய உறவினர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம். உன் மீது அளவிலா பற்று கொண்டுள்ள எங்களுக்கு, மற்ற பொருள்களின் மீது ஏற்படும் ஆசையை தவிர்த்தருள வேண்டும்."

அமலனாதிபிரான்

பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.


பதவுரை:
என்னுடைய முற்பிறவியின் பந்தங்களை நீக்கி, என்னை ஏற்றுக்கொண்டதோடு, என்னையும் ஆட்கொண்டவனும் ஆகிய திருவரங்கத்தில் வாழும் எம்பெருமானே! உன் திருமார்பில் அடியவனை சேர்த்துக் கொண்டதற்கு, என்ன பெருந்தவம் செய்தேன் என்று நான் அறியேனே!

ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.


பதவுரை:
ஆலிலைக் கண்ணனாய், சிறுவனாய், ஏழு உலகங்களையும் விழுங்கியவனும், சர்ப்பத்தில் பள்ளி கொண்டிருப்பவனும் பெரிய மணிகளால் ஆன ஆரமும், முத்து மாலையும் தன் நீலமேனியில் அணிந்தவனும் ஆகிய அரங்கநாதனின் ஒப்பற்ற/முடிவற்ற பேரழகு என் உள்ளத்தை முழுதும் வசப்படுத்தி விட்டதே!

கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே.


பதவுரை:
கொண்டல் பூக்களின் நிறத்தை உடையவனும், ஆயர்பாடியில் வெண்ணெயை திருடி உண்டவனும், அண்டசராசரத்திற்கு அதிபதியும் ஆன அமுதத்தை ஒத்த அரங்கநாதனை தரிசித்த எனது கண்கள் வேறெதையும் காண ஒருபோதும் விரும்பாதே!


பெரிய திருமொழி

தெரியேன் பாலகனாய்ப்* பலதீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேனாயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழையானேன்*
கரிசேர் பூம்பொழில்சூழ்* கனமாமலை வேங்கடவா.,*
அரியே. வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.


பதவுரை:
அறியாமல் சிறுவயதில் தவறுகள் பல செய்தேன், வளர்ந்தபின் ஏனையோர்க்கு பொருள் வழங்கி வறுமையில் உழன்றேன். பூஞ்சோலைகளால் சூழப்பட்ட பெருமலையில் வீற்றிருக்கும் வேங்கடமுடையானே! அரிநாமம் கொண்டவனே, உன்னிடம் சரணடைந்த என்னை ஏற்று ஆட்கொள்வாயாக!

வந்தாய் என்மனம் புகுந்தாய்* மன்னிநின்றாய்*
நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ.*
சிந்தாமணியே* திருவேங்கடம்மேய எந்தாய்.*
இனியான் உன்னை* என்றும் விடேனே.


பதவுரை:
எனக்கு நம்பியாக விளங்கும் நீ, என் உள்ளத்தில் புகுந்ததோடு, என்னுள் முழுதும் வியாபித்தும் இருக்கிறாய்! அணையாப் பெருஞ்சுடர் போன்றவனும், சிந்தாமணி போல் பிரகாசம் கொண்டவனும் ஆகிய திருவேங்கடப் பெம்மானே, உனை விட்டு இனி என்றும் விலக மாட்டேன்!

திருவாய்மொழி

வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*
வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.


பதவுரை:
வைகுந்தன், மணிவண்ணன் என்ற நாமங்களைக் கொண்ட, குறும்புகள் பல செய்த பொல்லாதவனே! வான் அரசனே! என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் என்னுள் நிறையவும், உன்னை சரணடைந்தவர்களின் துயர் நீக்கவும், அரக்கர்களை அழிக்கவும் உனை வேண்டினேன். உன்னிடம் வந்தடைந்த என்னை அழுத்தமாகப் பற்றிக் கொள்வாயாக!

வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.


பதவுரை:
வருவாய் என எண்ணும்போது வரமாட்டாய், வரமாட்டாய் என எண்ணும்போது வந்தருள்வாய்! தாமரை போன்ற கண்களும், சிவந்த இதழ்கள் கூடிய வாயும், அகண்ட தோள்களும் கொண்ட என் உயிருக்கு ஒப்பானவனே! இருள் போன்ற என் அல்லல்களையும், பாவங்களையும் துடைக்கும் ஒளியான வேங்கடேசனே! நான் உன் பாதங்களை விட்டுப் பிரியாமல் இருக்கும் நிலையை வேண்டினேன் ஐயனே!

அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே.


பதவுரை:
அலர்மேல் மங்கை எனும் இலக்குமி குடி கொண்டிருக்கும் திருமார்பனே! உன்னை விட்டு பிரியா நிலை வேண்டினேன். வானுலகம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களுக்கு அதிபதியே! என் அரசனே! தேவர்களும், பூதகணங்களும் நேசிக்கும் திருவேங்கடம் வாழ் பெருமானே! உன் திருவடியைத் தவிர வேறொரு புகலிடமும் இல்லாத நான், உன்னிடம் தஞ்சமடைந்தேனே!

என்றென்றும் அன்புடன்
பாலா



Sunday, December 19, 2004

வெங்கடெஷ் - தன்னம்பிக்கை, உழைப்பு, தியாகம் - இறுதி வரை!

இது வெங்கடெஷ் என்ற அசாதாரண வாலிபரைப் பற்றிய ஒரு மிகச் சிறிய கதை! ஏனெனில், ஒரு கால் நூற்றாண்டே அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! அதற்குள் அவர் வாழ்ந்த வாழ்க்கை, பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது தான் அதன் அற்புதமே! அவரைச் சீரழித்த ஒரு கொடிய நோயை எதிர்த்து போராடியபடி, பல வருடங்கள் தேசிய அளவில் செஸ் விளையாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெங்கடெஷ் தனது பத்தாவது வயதில், Duchenne Muscular Dystrophy-யால் (தசைகளை மெல்ல மெல்ல செயலிழக்கச் செய்யும் ஒரு கொடிய நோய்) பாதிக்கப்பட்டார். அந்த நோய்க்கு இன்று வரை குணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்நோய், பாதிக்கப்பட்டவரின் உடலில் பரவி மூளையை இறுதியாகத் தாக்கும்போது, மரணம் சம்பவிக்கிறது.

வெங்கடெஷ் தனது தன்னம்பிக்கையாலும் அயராத உழைப்பாலும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து வணிகவியல் பட்டதாரி ஆனதோடு, தேசிய அளவில் செஸ் விளையாடியும், பள்ளி மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அளித்தும் வந்தார். ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். இத்தனையும், ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே! நோய் முற்றிய நிலையில், அவரது கழுத்துக்குக் கீழ் முழுதும் செயலிழந்து விட்டது. மருத்தவமனையில் இருந்த அவர், தனது வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் ஒரு மகத்தான தியாகம் செய்ய முன் வந்தார்.


நோய் அவரது மூளையைத் தாக்குவதற்கு முன்னமே, அவரது உள்உறுப்புகள் தேவைப்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில், அவற்றை மனமுவந்து தானம் செய்ய விழைந்தார். ஒரு வகையில், தன்னை கருணைக் கொலை செய்யும்படி கேட்டுக் கொண்டார்!! தனது சாவின் மூலம் பலருக்கு வாழ்வு தர எண்ணிய அந்த தியாக உள்ளத்தின் இறுதி விருப்பம் சட்டத்தின் ஒப்புதல் இல்லாததால், நிறைவேறாமல் போனது! இதற்காக, அவரது தாயார் வெங்கடெஷின் மனுவை உயர்/உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று!

குணம் கண்டுபிடிக்கப்படாத ஒரு பெருநோயால், மிகுந்த வலியுடன் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அல்லது மருத்துவ இயந்திரங்கள் உதவியுடன் உயிர் தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் மனமுவந்து, சுயவிருப்பத்தின் பேரில், அவரது உள்உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தால், அதை செயல்படுத்த நமது நாட்டின் சட்டங்கள் இடம் தருவதில்லை. நமது நாட்டின் பல மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உள்உறுப்புகளுக்கான மாற்று அறுவை சிகிச்சை வேண்டி பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், உறுப்பு தானம் குறித்த சட்டம் திருத்தப்பட வேண்டுமா / கருணைக்கொலை அனுமதிக்கப்படலாமா என்ற கேள்விகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகின்றன.

Saturday, December 18, 2004

பல்லவியும் சரணமும் - 12

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. குளிர்காலத்தில் தளிர் பூங்கொடி கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுதோ, என் கண்ணன் ...
2. வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம் கேளாத வேணுகானம் கிளிப்பேச்சில்...
3. ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை...
4. உடம்பு என்பது உண்மையில் என்ன, கனவுகள் வாங்கும் பை தானே ...
5. அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற செவியிருக்கும் ...
6. சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்...
7. நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெள்ள மெள்ளவே புரியும் ...
8. தீராத ஊடலா, தேன் சிந்தும் கூடலா? என் அன்புக் காதலா...
9. கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம், கட்டி முடிந்ததடா, அதில் கட்டில் அமைந்ததடா ...
10. விழியில் ஏன் கோபமோ, விரகமோ, தாபமோ, ஸ்ரீதேவியே என் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

சரத்குமார் ரஜினியை தாக்கிப் பேச்சு!

குங்குமம் பத்திரிகையின் சமீபத்திய பதிவில், திருவாளர் சரத்குமார் ஒரு பேட்டிக்காக திருவாய் மலர்ந்திருக்கிறார். அதில், சில முத்துக்களை உதிர்த்தும் உள்ளார்.

MGR-ஐத் தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு திரையுலகில் தகுதி உடையவர் கிடையாது என்கிறார். தமிழ்நாடே ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று என்றோ ஒப்புக்கொண்ட பின் இவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று யாரும் அழவும் இல்லை, அவசியமும் இல்லை! ரஜினி தனது மகள் திருமணத்திற்கு அவரை முறையாக(!) அழைக்கவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில் தான் இவ்வாறு கூறியிருக்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு நேர்மாறாக, நடிகர்கள் ஒருவரை ஒருவர் தங்கள் படங்களில் தாக்காமல், ஒற்றுமையாக இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறார்! தமாஷ் தான்!

அடுத்து, ரஜினி மேல் விசாரணைக் கமிஷன் வைக்கலாம் என்கிறார். ஏனெனில், முதல்வருக்கு திரையுலகம் எடுத்த பாராட்டு விழாவில், ரஜினி தனக்கு வீரப்பனைப் பற்றி, மற்றவரை விட அதிகம் தெரியும் என்றாராம்! அவற்றை வீரப்பன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னமே போலீசுக்கு சொல்லவில்லையாம்! வீரப்பனின் குணநலன்களை(கொடூரம், வஞ்சகம், தந்திரம் போன்றவை) தான் நன்கு உணர்ந்திருந்ததாகப் பொருள் பொதிந்த ரஜினியின் கூற்றை சரத் திரித்துப் பார்க்கிறார். என்ன ஒரு கேலிக்கூத்து?

அடுத்து, தமிழக முதல்வர் திருட்டு விசிடியை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள், ஒரு முதல்வர் ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமை என்றும், அதற்காக பாராட்டு விழா எடுத்தது தேவையற்றது என தான் கருதுவதாகவும், அதனாலேயே அவ்விழாவை தான் புறக்கணித்ததாகவும் சரத் கூறியுள்ளார். இவர் தி.மு.க வை சார்ந்த ஒரு M.P. அதனால் தான் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது ஊர் உலகத்திற்கே தெரிந்த ஒரு சங்கதி! கலைஞர் முதல்வராக இருந்து, திரையுலகம் இப்படி ஒரு பாராட்டு விழா எடுத்தால், சரத் அதில் கலந்து கொள்ளாமல் இருப்பாரா என்று யாராவது கேட்டுச் சொன்னால் பரவாயில்லை!!!

அப்படியொன்றும், சத்யராஜ், கார்த்திக் போல சரத் குணச்சித்திர நடிப்பில், பரிமளித்தவரும் அல்லர். KS ரவிக்குமாரின் திரைப்படங்கள் தவிர்த்து, மற்ற படங்களில் ஒரே மாதிரியான(stereo-type) வேடங்களில் அவர் நடிப்பதைப் பார்த்து பார்த்து அலுத்து விட்டது. சரத் பாராளுமன்ற உறுப்பினர் ஆனதிலிருந்து எத்தனை முறை பாராளுமன்றக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறார் என்பதையும், அவர் தமிழ்நாட்டுக்காக, குறிப்பாக அவரது தொகுதியின் மேம்பாட்டுக்காக என்ன செய்துள்ளார் என்பதையும் அனைவரும் அறிவர்! இருந்தும், இம்மாதிரி பேட்டிகளில் பிறரைத் தாக்கிப் பேசுவது, அவரது வாடிக்கையாகி விட்டது மிகவும் வேடிக்கையான ஒரு விஷயம் தான்!!!

Tuesday, December 14, 2004

MS சுப்புலஷ்மி - அஞ்சலி

மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி --- 1916-2004

உலகமே அவருக்கு அஞ்சலி செலுத்தி முடித்து விட்ட வேளையில், எனக்கு அவரைப் பற்றி என் வலைப்பதிவில் சில விஷயங்களை பதிய வேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவின் இறுதியில், என் நண்பர் திரு.தேசிகனின் MS-உடனான ஒரு சிறு சந்திப்பை அவரே சொல்ல அதை வெளியிட்டிருக்கிறேன்.

எப்பேர்ப்பட்ட இசைப்பெரும்பொக்கிஷம் அவர்? அவரது தெய்வீகக் குரல் வாயிலாகத் தான், நான் வெங்கடேச சுப்ரபாதமும், விஷ்ணு ஸகஸ்ரநாமமும் பிழையறச் சொல்ல கற்றுக் கொண்டேன்! அவரது அன்னமாச்சார்யா கீர்த்தனைகளை, மனதில் குழப்பமோ வேதனையோ நிலவிய தருணங்களில், எத்தனை முறை கேட்டு அமைதி அடைந்திருக்கிறேன்! முக்கியமாக, 'பாவமுலோன, பாக்யமு நந்துலு' மற்றும் 'நானாட்டி பதுகு நாடகமு, கானக கன்னதி கைவல்யமு' ஆகியவை.

உள்ளத்தை உருக்கும், பக்தி ரஸம் சொட்டும் அவரது மீராபஜன், ஸ்ரீரங்கபுர விஹாரா, பஜகோவிந்தம் ஆகியவற்றை பலமுறை கேட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். 'காற்றினிலே வரும் கீதம்' பாடலில் அவர் தேன்குரலில் தவழ்ந்து வரும் இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட ஓரிசையில் (transcendence) லயிக்காத உயிரும் உண்டோ ? குறையொன்றும் இல்லாதவனைப் பற்றி அவர் பாடிய 'குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கண்ணா" வைக் கேட்டு நெஞ்சம் நெகிழாதாரும் உண்டோ ?

அவருடைய படல்களில் இருந்த சுருதி/வாக்சுத்தமும் சௌக்யமும் அனுபவிப்பதற்கு, கர்னாடக சங்கீதம் பயின்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரது நெஞ்சை உருக்கும் இசையின் வீச்சை, அவர் குரல் பட்டிதொட்டிகளிலெல்லாம் (கோயில் முதல் டீக்கடை வரை) ஒலித்ததன் மூலம் உணரலாம். பலதரப்பட்ட மக்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரல் வாயிலாக மயக்கி தன் கட்டுக்குள் வைத்திருந்தார் அந்த இசை சகாப்தம்! மகாத்மா காந்தி விரும்பிய 'வைஷ்ணவ ஜனதோ' பஜன் MS-இன் குரல் வாயிலாக பிரசத்தி பெற்றது! தன்னுடைய இசையால் மொழி வழித் தடைகளை உடைத்தெறிந்தவர் அவர்! திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் விண்ணப்பத்திற்கு இணங்கி, MS தனது 63-வது வயதில், தெலுங்கு கற்று, அதன் தொடர்ச்சியாக, பாலாஜி பஞ்சரத்னமாலா, அன்னமாச்சார்யா சங்கீர்த்தனைகளும் கூடிய ஒரு உன்னத இசைமாலையை தொடுத்து வேங்கடேசப் பெருமானுக்கு சூட்டினார்! பக்தியாலும், உழைப்பாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு MS ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.

மகாத்மாவே ஒரு முறை கூறியது போல், MS பாடும்போது, அவர் கடவுளுக்கு அருகில் செல்வதோடு மட்டுமல்லாமல், கேட்பவரையும் அதே பரவச நிலைக்குக் கூட்டிச் சென்று விடுவார்! அது அவருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று! பக்தியும் பாவமும் மேலோங்கும் அவரது மீராபஜன் இதற்கு ஒரு சிறந்த சான்று. பண்டித நேரு ஒரு முறை அவர் பாடலில் லயித்து "Who am I, a mere Prime minister, in front of the Queen of Music?" என்று கூறியிருக்கிறார். இசை வல்லுனர்கள் பலரும் கூட தேவகானம் பாடிய தேவதையாகவே அவரை கண்டார்கள். செம்மங்குடியிடம் அவருக்கிருந்த குருபக்தி அபாரமானது என்று பலரும் போற்றுவர். செம்மங்குடியே, MS-இன் குரல் சுருதியுடன் குழைந்து கலக்கும் விதத்தை, வெண்ணெய் நெய்யாக உருகுவதுடன் ஒப்பிட்டு அந்த சுகானுபவத்தை வர்ணிப்பது கடினம் என்று கூறியிருக்கிறார்!!!

இவற்றுக்கெல்லாம் மேலாக நான் கருதும் விஷயம், அவரது ஒப்பிலா மனிதநேயமே. எண்ணிலடங்கா நல்ல காரியங்களுக்கு அவரது இசை வித்திட்டது என்றால் அது மிகையாகாது. ஆனால், செய்த தானதருமங்கள் வெளியில் தெரியாவண்ணம் அவர் நடந்து கொண்டது தான் அவரை பலரிடமிருந்தும் தனித்து நிறுத்துகிறது. ஐ.நா. சபை வரை தன் இசையை கொண்டு சென்ற அவர், தான் ஈட்டியதில் பெரும்பங்கை பல தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்கியதால், ஒரு முறை, வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை பலர் அறிந்திருக்க மாட்டார்.அவர் வாங்கிய விருதுகள் தான் எத்தனை? வாங்கிய விருதுகளுக்கே பெருமை சேர்த்தவர் அந்த இசை மாமேதை! சிலவற்றை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

1. செம்மங்ககுடியும், ராஜமாணிக்கம்பிள்ளையும் வழங்கிய 'இசைவாணி' பட்டம் - 1940
2. பத்மபூஷன் விருது - 1954
3. சங்கீத கலாநிதி விருது - 1968
4. தில்லி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் - 1973
5. ராமோன் மக்ஸாஸே விருது - 1974
6. பத்மவிபூஷன் விருது - 1975
7. தமிழ்நாடு இசை இயல் நாடக மன்றத்தின் தனிப்பெரும்கலைஞர் விருது - 1980
8. தேச ஒற்றுமைக்கான இந்திராகாந்தி விருது - 1990
9. சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி விருது - 1997
10. அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் பாரத ரத்னா விருது - 1998

கானப்பெருங்குயில் ஒன்று படைத்தவனைக் காண இப்பூவுலகை விட்டு சென்று விட்டது. இன்னும் பல தலைமுறைகள் அவரது "கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா' வை கேட்ட வண்ணம் விடியலைத் தொடங்கும் என்பதில் ஐயமில்லை! இன்னும் பல நூற்றாண்டுகள், பல கோடி மாந்தர் MS-இன் மீராபஜனையும், 'ஹே கோவிந்தா, ஹே கோபாலா!' வையும் கேட்டு கண்ணீர் சிந்தவும், அவரது 'வைஷ்ணவ ஜனதோ'வை கேட்டு மனஅமைதி பெறவும் செய்வர் என்பதிலும் ஐயமில்லை!
என்றென்றும் அன்புடன்

பாலா




தேசிக அனுபவம்

ஆறு வருடங்களுக்கு முன் நான் புதுமணமானவனாக இருந்த சமயத்தில் நடந்த நிகழ்ச்சி அது. எனக்கும் கர்னாடக சங்கீதத்திற்கும் பரிச்சயம் சற்று குறைவு தான். ஆனால், என் மனைவி கர்னாடக சங்கீதத்தை அவரது குரு திருமதி ராதா விஸ்வநாதனிடம் (MS அவர்களின் மகள்) 18 வருடங்கள் முறைப்படி கற்றவர்.ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் என் மனைவியை இசை பயிலக் கூட்டிச் செல்வது என் முக்கிய அலுவல்களில் ஒன்று! ஒரு இனிய மதியத்தில் கிளாஸ் முடியும் தறுவாயில், MS தன் மகளின் வீட்டிற்குள் நுழைந்தார்! முதன்முதலாக அவரை நேரில் பார்த்தேன்! அந்த இசை மாமேதையின் முன் உட்கார மனமில்லாமல், நான் எழுந்து நின்று விட்டேன். பிறகு, தரையில் அமர எத்தனித்த என்னை MS தன் அருகில் இருந்த இருக்கையில் அமருமாறு கூறி விட்டு என் மனைவியை பாடுமாறு பணித்தார்.


என் மனைவி மிகுந்த தைரியத்துடன், MS ஏற்கனவே அற்புதமாக பாடியிருந்த சூர்தாஸின் ஒரு பஜன்-ஐ பாடிக் காட்டினார்! அதை முழுவதும் கேட்டு ரசித்துப் பாராட்டினார் MS! அந்த இசை சகாப்தத்தின் அருகில் அமர்ந்திருந்த அக்கணங்களில், என் மனதில் தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பது கடினம்! அவரிடம் விடைபெறுவதற்கு முன், அவர் பாதம் தொட்டு வணங்கி ஆசிகள் பெற்றுக் கொண்டோ ம். அப்பேர்பட்டவர், எங்களை தன் இல்லத்திற்கு ஒரு முறை வரும்படியும் கேட்டுக் கொண்டார்.


ஆறு ஆண்டுகளுக்குப் பின், நேற்று காலை, அவர் காலமாகி விட்ட சேதி அறிந்து மனம் கலங்கி அழுதேன்.


--- Desikan

Saturday, December 11, 2004

பல்லவியும் சரணமும் - 11

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் ...
2. ஆசை தந்த கனவுகள் எல்லாம், என்னால் தான் நனவுகளாகும்...
3. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி...
4. மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா? ...
5. கல்லாகி போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன் கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன் ...
6. என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை...
7. ஆற்று மணல் மேடெங்கும் பூ வரைந்த கோலங்கள் தேவமுல்லையே காணவில்லையே ...
8. தாவி வரும் கையசைவில் விளைந்தது தான் பாவமோ, தெய்வமகள் வாய் மலர்ந்து மொழிவது தான் ராகமோ...
9. கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே? ...
10. மாதங்கள் பலவாக உருவானதோ, மகராணி முகம் இன்னும் மெருகேருதோ ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, December 06, 2004

சிறு வயது சிந்தனைகள் - பகுதி 5

எதையும் திருந்தச் செய்தல் அவசியம் என்ற வாழ்க்கைப் பாடத்தை என் தாய்வழிப் பாட்டனாரிடம் (RBS என்றழைக்கப்பட்ட R.B.சடகோபாச்சரியார்) தான் கற்றுக் கொண்டேன்! அவர் ஒரு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். ஆங்கில இலக்கணத்தில் விற்பன்னர். பள்ளிக் காலத்தில் நான் பாடங்களை உரக்கக் கூறி மனப்பாடம் செய்வது வழக்கம். ஆங்கிலப்பாடம் சத்தமாகப் படிக்கையில், நான் ஏதாவது சின்னத்தவறு செய்தால், அவர் வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அத்தவறை உடனே சுட்டிக் காட்டி திருத்துவார்!

தாத்தாவின் retired வாழ்க்கை அபாரமானது. காலை சரியாக 4 மணிக்கு விழித்தெழுவார். மார்கழி மாதமானாலும், குளிப்பதற்கு சுடு தண்ணீர் உபயோகிக்க மாட்டார்! காலையில் காபி/தேநீர் அருந்த மாட்டார்! அதிகாலை பூஜை முடித்து, பார்த்தஸாரதி கோயில் சென்றால், வீடு திரும்புவதற்கு கிட்டத்தட்ட 11 மணியாகி விடும். சுமார் இரண்டு மணி நேரம் 'The Hindu' படித்து விட்டுத் தான், உணவைத் தொடுவார். அக்கால வழக்கப்படி, தனக்குப் பசித்தாலும், அவர் உணவருந்தியே பின்னரே, பாட்டி சாப்பிடுவார். மதியம் உறங்கும் பழக்கமற்றவராதலால், மறுபடியும் 'The Hindu'வைத் தொடர்வார். வீட்டின் கணக்கு வழக்குகளை கவனிப்பார். சில ஏழை மாணவர்களுக்கு இலவசமாக படிப்பு சொல்லித் தருவார்.

சரியாக மாலை 5 மணிக்கு சற்று பெரிய டம்ளரில் டிகிரி காபி அருந்தி விட்டு வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பிரபந்தப் பாராயணத்தைத் தொடங்குவார். இரவு ஏழரை மணிக்கு குறைந்த அளவு சாப்பாட்டிற்குப் பின், சரியாக 8 மணிக்கு ரேழியின் ஓரமாக படுக்கையிட்டு உறங்கச் சென்று விடுவார்! இதே Routine-ஐ, 12 ஆண்டுகள் அவர் கடைபிடித்ததை நான் பார்த்து வியந்திருக்கிறேன்! என் கல்வியார்வம், பக்தி, ஏழைகளுக்கு இரங்குதல், ஆங்கிலத்தில் ஓரளவு ஆளுமை போன்றவைகளுக்கு வித்திட்டவர் அவரே.

அவருக்கு ஏதாவது ஒரு காரணத்தினால் கோபம் ஏற்பட்டால், அதை அவர் வெளிப்படுத்தும் விதத்தில் நகைச்சுவை (SATIRE) நிறைந்திருக்கும்!!! அவர் ஒரு மாவடு (வடு மாங்காய்) பிரியர். பாட்டியும் ஒவ்வொரு வெயில் காலத்திலும், அவருக்காகவே பெரிய ஜாடி நிறைய மாவடு ஊறுகாய் தயாரித்து வைப்பது ஒரு வருடாந்திர சடங்கு போன்றே நடந்து வந்தது! ஒரு பத்து நாட்களாவது ஊறிய பின்னரே, மாவடு சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால், தாத்தாவோ மாவடு விஷயத்தில் பொறுமையை கடைபிடிக்க மாட்டார்.கடுமையான 'ஆசாரர்' ஆன அவரிடம், உண்ணும் இலையிலிருக்கும் ஒரு பதார்த்தத்தை எடுத்து கடித்து விட்டு மறுபடியும் இலையில் வைக்கும் பழக்கம் அறவே இல்லாததால், முதல் நாள் தயாரித்த மாவடுவை, அது சற்று கடினமாக இருக்கும்போது, கட்டை விரலாலேயே விண்டு உடைக்க முயன்று இயலாதபோது,'என் கட்டை விரலை உடைப்பதற்காகவே இதை செய்திருக்கிறாள்' என்று கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத கோபத்தில், அவருக்காகவே மாவடு தயாரித்த பாட்டியை அன்பாகத் திட்டுவார்!!! (எவ்வளவு பெரிய வாக்கியம் எழுதி விட்டேன்!)

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் அக்கா, குதூகலத்துடன் இருக்கிறாள் என்றால், அவள் நடையில் ஓட்டமும் துள்ளலும் தானாக ஏற்பட்டு விடும்! அம்மாதிரியான ஒரு சமயத்தில், சற்று பாவாடையை விசிறிக் கொண்டு அவள் செல்கையில், தாத்தா மீது மோதி விட்டாள்! தாத்தாவுக்குக் கோபம் மூக்கு நுனியில், அக்காவுக்கோ பயம்! ஆனால், தாத்தா கோபத்தை வெளிக்காட்டாமல், நிதானமாக அவளைப் பார்த்து, "கல்யாணம் ஆனபிறகு, இதே மாதிரி ஓட்டமும் நடையுமாக நீ இருப்பாயேயானால், உனக்கு வாய்க்கும் மாமியார் உன்னை மிகவும் மெச்சுவாள்!?" என்று ஒரு போடு போட்டார்! அக்கா உடனே சிரித்து விட, தாத்தாவுக்கும் கோபம் பறந்து போய் விட்டது!

பிறிதொரு சமயத்தில், எனக்கும் என் தம்பிக்குமிடையே நடந்த ஒரு சண்டையில் குறுக்கிட்டு, என்னைப் பார்த்து,"நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறாயா? சரியாக அவன் மூக்கைப் பார்த்து ஒரு குத்து விடு! அவனை மேலே அனுப்பி விட்டால், உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையல்லவா?!" என்று கூறியதன் தாக்கத்தில், நான் தம்பியுடன் சண்டை போடுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அடுத்தவர் மனமறிந்து, நாசூக்காக நடந்து கொள்ள அவர் ஒரு போதும் தவறியதில்லை, என்பேன். உதாரணமாக, பள்ளியில் பயில்கையில், நான் ஆங்கிலத் தேர்வு எழுதி விட்டு வீடு வரும் நேரம், அவர் வாசல் திண்ணையில் தான் அமர்ந்திருப்பார். ஆங்கிலத்தில் ஆர்வம் உள்ள அவருக்கு, நான் தேர்வை எவ்விதம் எழுதினேன் என்று அறிந்து கொள்ளவும், என் வினாத்தாளைக் காணவும் மிகுந்த ஆவல் மேலிட்டாலும், என்னை வாசலில் நிறுத்தி உடனடியாக ஒரு போதும் கேட்டதில்லை. நான் உணவருந்தி, சற்று ஓய்வெடுத்த பின்னரே, மெல்ல என்னிடம் வந்து, தேர்வைப் பற்றி விசாரிப்பார். வினாத்தாளையும், நான் வாய் வார்த்தையாகக் கூறும் பதில்களையும் வைத்து, அவர் கணித்துச் சொன்ன மதிப்பெண்களுக்கும், நான் தேர்வில் பெற்றதற்கும், அதிக வித்தியாசம் இருந்ததில்லை!!

எனக்கு பொறியியற் கல்லூரியில் பயில இடம் கிடைத்த தகவல் வருவதற்கு ஒரு மாதம் முன்பு அவர் இறந்து போனது என் வாழ்வில் ஒரு பெருஞ்சோகம் தான். அதை இன்று நினைத்தாலும் சற்று வேதனையாகத் தான் உள்ளது.


என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, December 04, 2004

பல்லவியும் சரணமும் - 10

இதற்கு முந்தைய 9 "பல்லவியும் சரணமும்" பதிவுகளில் கேட்கப்பட்ட 81 சரணங்களூக்கு, நீங்கள் கண்டுபிடிக்கத் தவறியவை just 5 மட்டுமே! நல்ல பாடல்களில் ஊறித் திளைத்திருக்கிறீர்கள் போலும் :-)

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. அழகி பார்த்தாலே அருவி நிமிராதோ? கண்ணாடி உனைக்கண்டு கண்கள் கூசும் ...
2. நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே, அமைதியின்றியே அலைய நேர்ந்ததே...
3. இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன், பூவிலே மெத்தைகள்...
4. ஊடல் அவளது வாடிக்கை என்னைத் தந்தேன் காணிக்கை ...
5. நித்தம் நித்தம் உள்ளம் களிக்க, கற்ற வித்தை எங்கும் செழிக்க முத்து ரத்தினம் ...
6. கன்னித்தமிழ் தேவி, மைக்கண்ணன் அவள் ஆவி, நல்காதல் மலர் தூவி மாலையிட்டாள்...
7. தூக்கம் கெட்டு கெட்டு, துடிக்கும் முல்லை மொட்டு, தேக்குமர தேகம் தொட்டு ...
8. அஞ்சு விரல் பட்டால் என்ன? அஞ்சுகத்தைத் தொட்டால் என்ன? தொட்ட சுகம்...
9. உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா! நனைந்த பொழுதினில் ...
10. பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள், மாமனைப் பாரடி கண்மணி என்றாள் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, December 03, 2004

சிரித்ததற்காக ஒருவர் கைது!

இது போல் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? இங்கிலாந்தில் மேற்கூறியது குறித்த வழக்கொன்று நீதிமன்றத்துக்கு வந்தது!

ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண் பேருந்தில் பயணித்தபோது ஓர் இளைஞன் தன்னைப் பார்த்து புன்னகைப்பதைக் கண்டு, தன் நிலைமை குறித்து வெட்கமும், சற்றே அவமானமும் அடைந்தாள். அதனால், தன்னுடைய இருக்கையை விட்டு விலகி வேறிடத்தில் அமர முற்பட்டபோது, அவன் புன்னகை சிரிப்பானது! மறுபடியும், இன்னும் சற்று நகர்ந்து வேறொரு இருக்கைக்கு இடம் பெயர்ந்தாள். அவ்விளைஞனின் சிரிப்பு அப்போது அடக்க முடியாத இடிச்சிரிப்பு ஆனதால், அப்பெண் கோபமுற்று, காவலரை அழைத்து அவனை கைது செய்ய வைத்தாள்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவன் அவ்வாறு ஒரு பொது இடத்தில் நடந்து கொண்டதற்கான காரணத்தை வினவினார். இளைஞன் கூறிய பதில் கீழே:

" ஐயா, அந்த கர்ப்பிணிப்பேண் பேருந்தில் ஏறியபின் அமர்ந்த இருக்கைக்கு நேர்மேலே 'வெகு விரைவில் வருகிறார்கள், தங்கத்தூசு இரட்டையர்கள்!' என்ற விளம்பரம் காணப்பட்டது. அவள் அடுத்து 'வில்லியம்மின் குச்சி செய்த மாயம்' என்ற ஷேவிங்க் விளம்பரத்திற்குக் கீழ் அமர்ந்தபோது, எனக்கு சிரிப்பு வந்து விட்டது. மூன்றாம் முறை, அப்பெண் உட்கார்ந்த இருக்கைக்கு மேலிருந்த 'டன்லப் ரப்பர் இவ்விபத்து நிகழாமல் நிச்சயம் தடுத்திருக்கும்!' என்ற விளம்பர வாசகத்தை கண்டவுடன், தாள முடியாமல் நான் சிரித்த பெருஞ்சிரிப்பு என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது! "

அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!!!


நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails